Tuesday, July 10, 2012

ட்ரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதடைந்துள்ளது

அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெருவில் ஜன நடமாட்டமும் குடியிருப்பு அதிகமான பகுதியுமான இடத்தில் இருக்கும் ட்ரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதடைந்துள்ளது மட்டுமல்லாமல் அடிக்கடி தீப்பொறியும் ஏற்படுகிறது. அதில் பொறுத்தப்பட்டிருக்கும் கம்பித் துண்டுகள் எறிந்த நிலையில் உடைந்து விழுவதால் பொதுமக்கள் மிக்க பீதியுடன் உள்ளனர். பொது மக்களளின் வேண்டுகோளுக்கிணங்க பலமுறை புகார் செய்தும் சம்பத்தப் பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே நமது மின்சார ஊழிய சகோதரர் ஒருவர் மின்சார விபத்தில் பலியானார் என்பதை ஞாபகப் படுத்திக் கொள்கிறேன். எனவே பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இதனை வெளியிடுகிறேன்.

Monday, July 2, 2012

முன்னேற்றப் பாதையில் ‘கர்ழன் ஹஸனா’(அழகிய கடன் அறக்கட்டளை) வட்டி ஒழிப்பு முயற்சியில் சிறிய எட்டு வைத்த பங்களிப்புதான், நமதூரில் சில மாதங்களுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட ‘கர்ழன் ஹஸனா’ ( قرضا حسنا ) எனும் அழகிய கடன் அறக்கட்டளையாகும். வட்டியின் தீங்கைப் பற்றி நம் அருள்மறை குர்ஆனும் நபிமொழிகளும் கூறும் எச்சரிக்கைகள் அப்படியே பதிவுகளாக இருக்க, நமது சமுதாயம் அன்றாடம் அனுபவித்துவரும் ‘கொடுமைகள்’ நம் கண் முன்னால் இருந்து கவலை தந்துகொண்டிருந்ததால், வட்டி அரக்கனைச் சிறு ஊசியைக் கொண்டாவது குத்தி வேதனைப் படுத்துவோம்; மக்கள் விழிப்புணர்வு பெறட்டும் எனும் உயர் நோக்கில் தொடங்கப்பட்ட அழகிய கடன் அறக்கட்டளை, எதிர்பார்த்ததைவிட மிகப் பெரும் வளர்ச்சியைக் கண்டு வருகின்றது! அல்ஹம்து லில்லாஹ்! முதலில் நிர்வாகிகள் மூவரால் தொடங்கப் பெற்ற இவ்வறக்கட்டளை, அண்மையில் இன்னும் ஆர்வலர்கள் சிலரைக் கொண்டு விரிவு படுத்தப்பட்டு, பல கைகள் எழுப்பும் பேரோசையாகப் பரிணமிக்கத் தொடங்கியுள்ளது! அந்த ஆர்வலர்களின் அயராத ஒத்துழைப்பின் பயனாக, பள்ளிவாசல்களிலும் விளையாட்டு மைதானங்களிலும் மக்கள் கூடுமிடங்களிலும் நமதூர் மக்களைச் சந்தித்து, நன்கொடைகளாகவும் ஜக்காத் நிதிகளாகவும் நிதியைப் பெற்று, மாஷா அல்லாஹ், இப்போது இவ்வறக் கட்டளையின் வைப்புத் தொகை வளர்ச்சி பெற்றுள்ளது! சிறு வியாபாரிகளும் ஏழை அன்றாடங் காய்ச்சிகளும் எம்மை அணுகி, ஏற்கனவே அவர்கள் மூழ்கியிருந்த வட்டியிலிருந்து விடுதலை பெற்றுவருகின்றார்கள்! எமது அழகிய கடன் சேவையால் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.. இவ்வறக்கட்டளையின் நம்பகத் தன்மையை உணர்ந்த சிலர், தமது ‘ஜக்காத்’ நிதியைக்கூட அனுப்பிவைத்துள்ளனர் என்ற தகவலும் வாசகர்கள் அறியவேண்டிய ஒன்றாகும். முறையாகச் சட்ட வரைவுகள் உருவாக்கப்பட்டு, ஆரவாரமின்றி, அமைதியாகச் செயல்படத் தொடங்கியுள்ள இவ்வறக்கட்டளை, வட்டியில் வீழ்ந்து தமக்குக் கிடைக்க வேண்டிய முழு வருமானத்தையும் இழந்து தவிக்கும் சிறு வியாபாரிகளை இலக்காகக் கொண்டு, சேவையாற்றி வருகின்றது. நமதூரில் நன்கு செயல்பட்டு வரும் எந்தப் பொது அமைப்புக்கும் இவ்வறக்கட்டளை எதிரானதன்று என்பதை மீண்டும் கூறிக்கொள்ள விழைகின்றோம்.